இரவு தேவதை


நிசப்தமான இரவு, நள்ளிரவு நேரம் நகரின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன , அதுவரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலைகளில் ஓரிரு வாகனங்கள் மட்டுமே செல்லும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது, தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவன் ஒருவன் மட்டும் நடந்து சென்று கொண்டிருந்தான்.அவன் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது.ஷிப்ட் முறையில் இன்றிலிருந்து அவனுக்கு இரண்டாவது நேர ஷிப்ட்.நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

அவன் வீடு சாலையிலிருந்து கொஞ்சம் உள்ளடங்கி இருந்தது. பல முறை அந்த சாலையின் வழியே வந்திருந்தாலும் முதல் முறையாக நள்ளிரவில் தனியே ஒரு பயணம் புதிய அனுபவமாக இருந்தது. இருளின் வழியில் அவன் நடந்து செல்லும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவன் உள்மனதிற்குள் யாரோ அவனை பின் தொடர்வது போல் ஒரு உணர்வு.நாட்கள் செல்ல செல்ல அந்த தனிமையின் பயம் நீங்கியது, ஆனால் அவன் மனதிற்குள் யாரோ பின் தொடரும் அந்த உணர்வு மட்டும் நீங்கவில்லை.

ஒரு நாள் வழக்கம் போல வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தான், இன்றும் அதே உணர்வு, கொஞ்சம் மனதை தயார்படுத்திக்கொண்டு திரும்பிப் பார்த்தான்,தூரத்தில் யாரோ வருவது போல் தெரிந்தது,அவனை நெருங்க நெருங்க அவனுக்குள் ஒரு கலக்கம் சிறிது நேரத்தில் அவன் விழிகள் இரண்டும் அசையாமல் அப்படியே இருந்தது தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஒரு அழகிய இளம் பெண் தேவதை போல மெல்லிய புன்னகையுடன் அவனை கடந்து சென்றால்.

அவள் யாரென்று தெரியாவிட்டாலும், தினமும் அவளை அந்த வேளையில் எதிர்ப்பார்க்கத் தொடங்கினான், அவளும் கடந்து செல்லும் போதெல்லாம் புன்னகை வீசிச் சென்றால். ஒரு நாள் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்ததால் அவன் வர நேரமாகிற்று இன்று அவளை காண முடியாது என்று எண்ணிக்கொண்டே சென்றான்,அப்பொழுது அவன் கண்ணை அவனால் கூட நம்ப முடியவில்லை தெரு விளக்கின் வெளிச்சத்தில் தேவதை போல நின்று கொண்டிருந்தாள். அந்த நொடி அவன் மனதிற்குள் எழுந்த மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.

யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்,கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் சென்று பேச தயாரானான்..

 "ஹலோ"
 "ஹாய் "
"நான் ராகவ், யு ?"
"ஷாலினி"
"டெய்லி  இந்த நேரத்துக்கு வரீங்களே வொர்க் பண்ணுறீங்களா?"
"எஸ், நீங்களுமா?"
"யா,இந்த வழியாவே போறீங்களே உங்க வீடும் இங்க தான் இருக்கா?"
"ஆமாம்,உங்க வீட்டுக்கு அடுத்த தெரு"
"ஓ "
"அப்புறம்"
 இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள், அந்த இருளின் அமைதியில் அவர்கள் இருவரின் சிரிப்பு சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்த்தது.

நாட்கள் செல்ல செல்ல இருவரும் நன்கு பழக தொடங்கிவிட்டார்கள் அவனுக்காக அவள் தினமும் காத்திருக்க தொடங்கினால். ஒருவருக்கொருவர் வெளிக்காட்டாவிட்டாலும் ஒருவரையொருவர் மனதிற்குள் நேசித்துக் கொண்டிருந்தனர்.

அன்று அவள் பிறந்த நாள்,இன்று எப்படியாவது அவளிடம் தன் விருப்பத்தை அவள் வீட்டிற்கே சென்று கூறிவிட வேண்டும் என்று முடிவு செய்து,நன்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு கையில் பூவுடன் வீட்டிற்கு சென்று கதவை தட்டினான்.கதவு திறந்தது, வாடிய முகத்துடன் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து நின்றார்,

"ஹலோ சார்,இது ஷாலினி வீடு தான  "
"ஆமாம்பா,நீ யாரு ஷாலினி பிரெண்டா?"
"ஆமாம் சார்.."
"உள்ள வாப்பா.."
புன்னகையுடன் உள்ளே செல்ல காலடி வைத்த அவனுக்கு ஒரு அதிர்ச்சி, அப்படியே உறைந்து நின்ற அவன்  கண்களிலிருந்து மட்டும் கண்ணீர் துளிகள் வந்துகொண்டிருந்தது. அடுத்த நொடியே எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அன்றிரவு அவளுக்கு பிடித்தவாறு தன்னை தயார் செய்து கொண்டு கையில் பூவுடன் அவனுக்காக வழக்கமாக அவள் காத்திருக்கும் அந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில் காத்திருந்தான் கண்ணீர்த் துளிகளுடன் அந்த இரவு தேவதையின் வருகைக்காக...
இரவு தேவதை இரவு தேவதை Reviewed by Unknown on Friday, August 02, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.